Ad Widget

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வழிசமைக்கவும் – விஜயகாந்

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அதற்கான பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறும் முற்போக்கு தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார்.

s-vijayakanth

அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு இன்று(06) அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தின் பிரதிகள், வடமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை அமைச்சர்கள், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் உரிமைக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலான அஹிம்சை வழிப்போராட்டத்திலும் 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்திலும் நம்பிக்கை வைத்து, தமிழர்களாக பிறந்த ஒவ்வொரு இளைஞர், யுவதிகளும் அந்தந்த காலத்துக்கு ஏற்ப தங்களுடைய உயிர் அர்ப்பணிப்புக்களை செய்து தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக போராடி வந்தார்கள்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து சிங்கள தேசத்துக்கு எதிராக போராடி தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து போராடி பல்லாயிரம் தமிழ் இளைஞர், யுவதிகள், மாவீரர்களானார்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் எண்ணிக்கையற்ற இளைஞர், யுவதிகள் முன்னாள் போராளிகளாகினர்.

முன்னாள் போராளிகளில் எண்ணிலடங்காதவர்கள் தமது உடல் உறுப்புக்களையும் இழந்து அங்கவீனமானவர்களாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் உளவியல் ரீதியாகவும் பாதிப்படைந்து இன்று தமிழ்ச் சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் இவ்வாறு வாழ்ந்து வந்தாலும் அவர்களுடைய குடும்ப நிலைமையும், உற்றார், உறவினர்களின் நிலைமையும் மிகவும் மோசமான நிலைமையாகவே காணப்படுகின்றது.

இன்று எந்த தமிழ் இணையத்தளங்களாக இருந்தாலும், முகப்புத்தகம் போன்ற சமூக இணையத்தளமாக இருந்தாலும் முன்னாள் போராளிகளின் படங்களைப் பதிவு செய்து இவர்கள் வாழ வழியின்றி இருக்கின்றார்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்ற செய்திகளே நிமிடத்துக்கு நிமிடம் உலா வந்து கொண்டு இருக்கின்றது.

இந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு தேர்தலில் களமிறங்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், பிரமுகர்களும் தாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய மாவீரர்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் ஒரு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தி தருவோம், என்ற அடிப்படையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள்.

குறிப்பாக தாங்கள் சார்ந்திருந்த தமிழத் தேசியக்கூட்டமைப்பும் இவற்றையே சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றது.

ஆனால், இன்று வடமாகாணசபையைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்ற நிலைமையிலும் கூட ஈழ போராட்டத்துக்கு தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்துக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பத்துக்கும் வாழ்வாதார உதவிகள் செய்ததாக எந்தப்பதிவுகளும் இடம்பெறவில்லை.

தாங்கள் பொறுப்பேற்றுள்ள வடமாகாணசபையில் இன்று வரை நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றியுள்ளீர்கள் என்பது எமக்கும் மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயமே அந்த வகையில் தமிழ் மக்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து உயிர், உடல் தியாகங்களைச் செய்த சகோதர, சகோதரிகளின் குடும்பத்துக்கு தாங்கள் பொறுப்பேற்ற வடமாகாண சபையின் ஊடக வாழ்வாதார உதவிகளை அல்லது அவர்கள் பசியாறுவதற்கான உலர் உணவு நிவாரணத்தைகயாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடமாகாணசபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மாவீரர்களின் குடும்பத்துக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்.

இதுவே, எமது கட்சி சார்பாக உங்களிடம் வைக்கும் முக்கிய கோரிக்கையாகும். இது குறித்து வடமாகாண சபையில் விசேட தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வந்து அதனை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். என வடமாகாண சபையின் முதலமைச்சர் என்ற ரீதியில் தங்களைத் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு தாங்கள் பொறுப்பேற்றுள்ள வடமாகாண சபை இவ் உதவியைச் செய்யுமாக இருந்தால் தமிழ் மக்களின் விடிவுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் ஆத்மா சாந்தியடையும் என நாம் நம்புகின்றோம்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உயிர்வாழ்வதற்கு போராடி வருகின்ற ஒவ்வொரு முன்னாள் போராளி குடும்பத்தினரும் இவ்வுதவி மூலம் அதிக பயனடைவார்கள் என்பதுடன் அவர்களுடைய தியாகங்களுக்கு நாங்கள் செய்கின்ற ஒரு கௌரவமாகவும் இருக்கும் என நம்புகின்றோம்.

எனவே, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்க வேண்டும். என்று மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts