Ad Widget

முன்னாள் புலி உறுப்பினர் கொலை: அரச ஊழியர் கைது

இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும் விபரங்களும் விசாரணைகளில் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
கொலைக்கான காரணம் பற்றிய தகவல்களை விசாரணைகள் முடிவடைந்ததும் சில தினங்களில் வெளியிடுவதாகவும் அஜித் ரோகண கூறினார்.

அதேவேளை, முக்கிய அரச அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே என்று கேட்டதற்கு பதிலளித்த காவல்துறை பேச்சாளர், அந்தப் பகுதியின் பிரதேச செயலாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.

‘பல விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சாட்சியங்களின் ஊடாக இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையையும் பாராமல் நாங்கள் கைது செய்வோம்’ என்றார் காவல்துறை பேச்சாளர்.
கடந்த புதன்கிழமை இரவு மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரன் விடுதலைப் புலிகளின் காவல்துறையில் முன்னர் பணியாற்றியிருந்தார்.

பின்னர் அவர் இராணுவத்தினாரல் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு, அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தபோதே அடையாளம் தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

Related Posts