Ad Widget

முத்தப்போராட்டம் ஆபாசத்தின் வெளிப்பாடு நடிகை ஷீலா ஆவேசம்

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஆண்டு ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. முகநூல் மூலம் இதற்கு ஆதரவாளர்கள் பெருகினர். அவர்கள் பொது இடத்தில் சந்தித்து இந்த அமைப்பினை விரிவுபடுத்த முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து ‘கிஸ் ஆப் லவ்’ அமைப்பு பற்றிய தகவல்கள் நாடு முழுவதும் பரவியது.

சென்னையிலும், டெல்லியிலும் இந்த அமைப்பை ஆதரித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கேரளாவில் மட்டும் இதற்கு ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொச்சியில் இந்த அமைப்பினர் முத்தப்போராட்டம் நடத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் இருதரப்பினரும் மோதிக்கொண்டதுடன் போலீஸ் தடியடியும் நடைபெற்றது.

இதுகுறித்து பழம்பெரும் நடிகை ஷீலா கூறியதாவது:-

கேரளாவில் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் நடக்கும் செயல்கள் மனதை நெருட வைக்கிறது. கேரள இளம் தலைமுறையின் எண்ணங்கள் குறுகி விட்டதோ? என்று எண்ணத்தோன்றுகிறது.

இருவர் முத்தமிட்டு கொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அது அவரவர் வீடுகளில் உள்ள படுக்கை அறையில் நடக்க வேண்டும். அதனை தெருவுக்கு கொண்டு வருவது அநாகரீகம்.

இப்போது தெருவில் முத்தமிட்டு கொள்பவர்கள் அடுத்து மேலை நாடுகளில் நடப்பதை போல தெருவில் நிர்வாண மாக அலைய விரும்புகிறார்களா? என்று தெரியவில்லை.

தனியறையில் நடப்பவற்றை அங்குதான் செய்ய வேண்டும். அதனை பொது இடத்தில் மேற்கொள்ளக்கூடாது. அதுதான் நமது கலாசாரம். ஒருபோதும் அதனை மீறக்கூடாது.

மலையாள திரையுலகில் நான் உச்சத்தில் இருந்தபோது விபசாரி வேடத்தில் ‘கபாலிகா’ என்ற படத்தில் நடித்தேன். அதில் இடம் பெற்ற எந்த காட்சியும் மனதை உறுத்துவதாக இருக்காது. நானும் அத்தகைய வேடங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒருமுறை தமிழ் திரையுலகின் முன்னணி நிறுவனத்தினர் என்னை அவர்களின் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும்படி கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

இதுபோல தயாரிப்பாளர் ஹரிபோத்தன் என்னை அணுகி ‘ரதி நிர்வேதம்’ என்ற படத்தில் நடிக்க அழைத்தார். அதன் கதை எனக்கு பிடிக்காததால் அதில் நடிக்க மறுத்துவிட்டேன். எந்த சூழ்நிலையிலும் நமது நாகரிகத்தை, கலாசாரத்தை சீரழிக்கும் எந்த செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது.

Related Posts