நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.

நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 3:00 மணியளவில், சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி மற்றும் பல திரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் நேரடியாக களம் இறங்குகின்றனர்.
வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது.