முக்கொலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையைப் பெறும்படி பொலிஸாரிற்கு அறிவுறுத்தல்

judgement_court_pinaiஅச்சுவேலி கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சியங்கள் இரண்டு பேரும் மற்றும் 4 வேறு நான்கு பேரும் தங்கள் சாட்சியங்களை நேற்று வெள்ளிக்கிழமை (18) பதிவு செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்குத் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, அச்சுவேலிப் பொலிஸாரிற்கு கூறியதுடன், முக்கொலை சந்தேகநபரான தனஞ்செயனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தைச்; சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி கொலைகளை செய்திருந்தார்.

ஏற்கெனவே, கொல்லப்பட்ட மதுசாவின் கணவன் யசோதரன், கொலையாளியான தனஞ்செயனின் மனைவி தர்மிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி கொலைகளை நேரில் கண்டதாகச் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts