Ad Widget

“முகச்சீராக்கல் சிகிச்சை தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்” – விசேட வைத்திய நிபுணர் ப.சத்தியகுமார்

முகச்சீராக்கல் சிகிச்சை செய்வதில் மக்களுக்கு விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், இந்த சிகிச்சை தொடர்பில் அவர்கள் ஆர்வமின்றி உள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பல், முகச்சீராக்கல் விசேட வைத்திய நிபுணர் ப.சத்தியகுமார் இன்று தெரிவித்தார்.

Dr-P-Saththeyakumar

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல், முகச்சீராக்கல் சிகிச்சை நிலையம் ஒன்று கடந்த ஒரு வருட காலமாக இயங்கி வருகின்றது. இருந்தும் இந்த நிலையம் யாழில் அமைந்துள்ளது தொடர்பில் பொதுமக்கள் பலருக்கு தெரியாது.

இந்நிலையம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் சரியாக இல்லை. வடமாகாணத்தில் இருக்கின்ற ஒரேயொரு முகச்சீராக்கல் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த சிகிச்சை நிலையத்தில் அண்ணப்பிளவு, உதட்டுப்பிளவு, தாடைப்பிளவு, மிதப்புபல், பல் அடைத்தல், நிரந்தர பல் கட்டுதல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னர் இந்தியாவிற்கு சென்று அதிக பணம் செலவு செய்து செய்யவேண்டிய இந்த சிகிச்சை, தற்போது யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

முதியோர்களுக்கு புதன்கிழமைகளிலும், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் 8 மணி தொடக்கம் 12 மணிவரையில் சிகிச்சையளிக்கப்படுவதுடன், மற்றவர்களுக்கு அனைத்து நாட்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்த நிலையத்தில் முகச்சீராக்கல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இல்லாத குறை காணப்படுகின்றது.

அத்துடன், வளப்பற்றாக்குறையும் காணப்படுகின்றது. வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்த தனியார், தொண்டர் அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன உதவிகள் செய்ய வேண்டும்.

வளப்பற்றாக்குறையால் எக்ஸ் – றே உள்ளிட்ட சில தொழில்நுட்ப சேவைகளை கொழும்பிற்கு சென்று பெறவேண்டிய தேவைகள் இருக்கின்றன. முகச்சீராக்கல் சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியர்கள் வடமாகாணத்தில் இல்லை. ஆனால் தென்னிலங்கையில் பிரதேச வைத்தியசாலைகளிலும் இந்த வைத்தியர்கள் இருக்கின்றனர் என்றார்.

மூக்கினால் கதைப்பவர்களுக்கு மொழி நடைகளை பயிற்றுவிக்கும் வைத்திய நிபுணர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். இவ்வைத்தியர், முகச்சீராக்கலுடன் தொடர்புபட்ட வைத்தியர். ஆனால், கிளிநொச்சி வைத்தியசாலையில் முகச்சீராக்கல் நிலையம் இல்லை.

யாழில் முகச்சீராக்கல் நிலையம் இருக்கின்றது. ஆனால் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லை. ஆகவே கிளிநொச்சியில் கடமையாற்றுபவரை யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் சில முகச்சீராக்கல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் யாழ்ப்பாணத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

பல் மிதப்பை தவிர்க்க வேலி அடைக்கும் கம்பி கொண்டு ‘கிளிப்’ போட்ட வைத்தியர்!

Related Posts