Ad Widget

மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியதுபோல், அதேவகையான குற்றச்சாட்டில் ஒரே மாதிரியான தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எங்களது பிள்ளைகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென போதைப் பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளோரின் பெற்றோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இன்றையதினம் (20) காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலை பகுதியிலிருந்து நகர்ப்பகுதி வழியாக ஊர்வலமாக வந்த குருநகர் மக்கள் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு வருகை தந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை கோரும் மகஜர் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடாக வழங்குவதற்கு கையளித்தனர்.

தற்போது வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தற்சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பில் இருக்கின்றார். ஆகவே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் ஈ.பி.டி.பி பாரளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரின் (உதயன்) அவர்களும், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா அவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜரைப் பெற்றுக் கொண்டனர்.

மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்கரர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமக்கு பெற்றோர் வழங்கிய கோரிக்கை மகஜர் தொடர்பாக நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருப்பதாகவும், உங்களது கோரிக்கையை பெருமளவானவர்கள் கையொப்பம் இட்டு உறுதிப்படுத்துவார்களாக இருந்தால் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து நேரடியாக உங்களை சந்தித்து கலந்துரையாடுவேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஐந்து இந்திய மீனவர்களும், யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மூன்று இலங்கை மீனவர்களுமான எட்டுப் பேருக்கு இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களில் ஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவஜினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

fisher1

fisher2

fisher3

fisher5

Related Posts