“நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது. மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும் கூடுதலான முயற்சிகளை செய்து போரில்லாத இந்தச் சூழலில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உழைப்போம்”
இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி வாக்குகளை அபகரித்தவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான அரசியல் தீர்வு மற்றும் காணாமற்போனோர் விவகாரம், காணிகள் மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, எமது இளையோருக்கான வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டத் தவறியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்ததால், தமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்காக வீதியில் இறங்கிப்போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
பல தசாப்தங்களுக்கு மேலாக போர் அழிவுகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ள எமது மக்களுக்கு,வாழ்க்கைச் சுமையும், விலைவாசி உயர்வும் மேலும் துயரத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்றும்,எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப அதற்கான முயற்சிகளையும், வழிகாட்டல்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும்.
பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள மாகாணசபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபையை பொறுப்பேற்று நடத்தும் சூழலை உருவாக்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நம்புகின்றோம் – என்றுள்ளது.