Ad Widget

மிக முக்கிய சாட்சியங்களை எம்மிடம் தாருங்கள்: சுமந்திரன்

sumantheranஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வழங்க, மிக முக்கிய சாட்சியம் ஒன்று இருந்தால், அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொள்வதன் ஊடாக அச்சாட்சியத்தினை அளிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச விசாரணைக்குழுவினால் விசாரிக்கப்படுகின்றன. அதற்கு சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாகவே இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அக் குழுவினர் மனித உரிமை மீறல்களும் அதற்கு ஒத்த குற்றங்களும் மட்டுமின்றி சர்வதேச மனிதாபிமான குற்றங்களும் விசாரிக்கின்றன. சர்வதேச மனிதாபிமான குற்றம் என்பதற்குள் போர்க் குற்றங்களும் உள்ளடங்கப்படுகின்றன.

இக்குழுவினர், இறுதி போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மட்டும் மேற்கொள்ளாமல் போரின் பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும் நோக்குடன் நடைபெற்ற போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாகவும் என கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றவை தொடர்பாகவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

கொலைகள், காணமற்போனவர்கள், இடம்பெயர்ந்தோர், சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளோர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சித்திரவதைகள் போன்றவை தொடர்பாக இக்குழுவில் உள்ள 14 பேர் அடங்கிய நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இக்குழுவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் யார்? எங்கே விசாரணைகளை மேற்கொள்கின்றனர்? யாரை விசாரணை செய்கின்றனர்? என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.

ஏனெனில் சாட்சியங்களை பாதுகாப்பதிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்கள் இலங்கையில் உள்ள சாட்சியங்களை மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள சாட்சியங்களிடமும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

சாட்சிப் பதிவுகளை கொண்ட முதல் அறிக்கையினை இக்குழுவினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா விடம் கையளிக்கவுள்ளனர். இறுதி அறிக்கையினை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தில் கையளிக்கவுள்ளனர்.

இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள், மனிதாபிமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் இருந்தால் அவற்றினை கொடுக்க ஐ.நா சில வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

மிக முக்கிய சாட்சியம் ஒன்று இருந்தால், அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொள்வதன் ஊடாக அச்சாட்சியத்தினை அளிக்க முடியும்.

இந்த சர்வதேச விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது மிக உயர்ந்த தரத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணை ஆகும். இந்த விசாரணை திறம்பட மேற்கொள்ளப்பட்டு அதனூடாக உண்மைத் தன்மை வெளிப்பட்டு, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடுகள் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts