Ad Widget

மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு மாற்றுத் தலைமையை கொடுப்போம் – டக்ளஸ்

தமிழ் மக்கள் அனைவரும் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். அதை உணர்ந்து செயற்பாட்டிலும் காட்டியுள்ளார்கள். எனவே மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குவதற்கு வலுவான பொதுக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளோம். அதற்கு பேரம்பேசும் அரசியல் பலம் தேவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Daklas-devanantha

யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

புதிய அரசு வருவதற்கு வாக்களியுங்கள், சந்திரிக்காவிடமும் மைத்திரியிடமும் ரணிலிடமும் நம்பிக்கையான உறுதிமொழிகளைப் பெற்றிருக்கின்றோம். நாங்கள் கொண்டு வரப்போகும் புதிய அரசில் அனைத்துக் கட்சி சபையை அமைத்து தீர்வைக் காண்போம். 2015 இல் நிச்சயம் தீர்வு என்று சொல்லித்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை வாக்களிக்க சொன்னார்கள்.

கூட்டமைப்பினர் இன்று இந்த அரசையும் நாங்கள் நம்பவில்லை என்று ஆட்சி மாற்றம் நடந்து ஒரே மாதத்திலேயே சொல்வதாக இருந்தால், தேர்தலில் பிழையாக தமிழ் பேசும் மக்களை வழிநடத்தியமைக்காக முதலில் தமிழ் பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமல்லவா?

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு மாத காலத்துக்குள்ளேயே அவர்களே ஏற்றுக்கொண்ட புதிய அரசுடன் பகைமையையும் வீரப் பேச்சுக்களையும் பேசத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்த் தேசிய தலைமைகள் ஆளுக்கொரு கருத்தைக்கூறி மக்களை பகடைக்காய்களாக்கி வருகின்றார்கள்.

புதிய அரசில் நம்பிக்கையற்றுவிட்டால், ஏன் அரசின் தேசிய நிறைவேற்றுச் சபையில் இருந்து விலகுவதற்கு முன்வரவில்லை. இவ்வாறு கேள்விகள் எழுப்பினால் தேசத் துரோகமா?

இலங்கையில் எல்லா அரசுகளும் ஏமாற்றுகின்றன. சர்வதேசமும் இந்தியாவும் ஏமாற்றுகிறது என்றால், தீர்வை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்றிட்டம் என்னவென்று தமிழ் மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது முன்னைய செயற்பாடுகளை இணக்க அரசியல், 13 ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு கருத்து கூறுகின்ற அதேவேளை நடைமுறையில் ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல கட்சிகளுடனும் பல சக்திகளை கொண்ட அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.

அரசியலில் சம உரிமை, அபிவிருத்தியில் சமத்துவம், எமது நிலம் எமக்கே சொந்தம் என்ற எமது கொள்கைகளின் அடிப்படையில், 1970 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்ற அரசியல் கொலைகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும்.

தமிழனாகவும் இலங்கையராகவும் எம்மை அடையாளப்படுத்தி நாம் உரிமையுடன் வாழ்வதே எமது நோக்கம் ஆகும். இனத்தின் மீது அக்கறையும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே அவற்றை செயற்படுத்த முடியும்.

அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் பல்கலைக்கழக பேரவை தொடர்பான கேள்வியை முன்வைத்த போது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல்கலைக்கழக செயற்பாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்ட காலங்களில் இந்தப் பேரவை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் இதை குழப்புவதற்காக சில சக்திகள் செயற்படுகின்றன.

இது எமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய பிரச்சாரம் ஆகும். பல்கலைக்கழக நிர்வாகத்தில் சீர்கேடுகள் இடம்பெற்றமை தொடர்பாக நிரூபிக்கக்கூடிய சான்றுகள் கிடைத்தால் அதை மீள்பரிசீலனை செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.

நாவற்குழி வீட்டுத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட காணிகளின் உறுதிகள் தவறானவை என வெளிவந்த செய்திகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு டக்ளஸ் பதிலளிக்கையில், “அது காணி உறுதிகள் அல்ல. வீடுகள் கொடுக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

சிலர் தமது அறியாமையை வெளிப்படுத்தி ஜனநாயக விரோதமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அவை நிரூபிக்கப்படவேண்டும் என அவர் கூறினார்.

Related Posts