Ad Widget

மாணவரின் பாதுகாப்புக்கு உபவேந்தரும் உயர் கல்வி அமைச்சருமே பொறுப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை கண்டித்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி, பல்கலைக்கழக உபவேந்தரும் உயர்கல்வி அமைச்சரும் இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

s-vijayakanth

இது குறித்து அந்தக்கட்சி விடுத்துள்ள ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதில் நான்கு மாணவர்களின் பெயர்களும், ஆசிரியர் சங்கத் தலைவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு அவர்கள் மாவீர்ர் தினம் கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் கொல்லபடுவார்கள் எனவும் கொச்சைத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அநாமதேயமான பல்கலைக்கழக வளாகத்தில் தோன்றுவது இதுதான் முதல் தடவை அல்ல. பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் இருக்கும் போதும், சுற்றிவர இராணுவ நடமாட்டம் இருக்கும் போதும் இவை எப்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் திடீரென தோன்றுகின்றது என்பது இங்கு எழும் கேள்வியாகும். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு கூறவேண்டிய உபவேந்தர் அவர்கள் இப்படியான சம்பவங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

பலத்த பாதுகாப்பின் மத்தியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படியான சட்ட விரோத கொலை அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் சுவரொட்டிகள் காணப்படுகின்றன என்றால் இவை போன்ற அச்சம் ஊட்டும் நடவடிக்கைகள் இராணுவ புலனாய்வு பிரிவிராலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்ற மாணவர்களின் சந்தேகத்தை தவறு என்று கூறிவிட முடியுமா?

அப்படியானால் மாணவர்கள் அச்சம் இன்றி தங்கள் கல்வியை தொடர முடியுமா? அவர்கள் சுதந்திரமாக தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? ஒரு ஐனநாயக நாட்டில் இப்படியான பயங்கரங்கள் அனுமதிக்க முடியுமா? இங்கு ஒரு கண்ணுக்கு தெரியாத ஒடுக்குமுறை நிர்வாக அமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

தமது உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கக் கூடிய மாவீரர்களை நினைவுகூறுவது மாணவர்களின் உரிமையாகும். அதைத் தடுக்க எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் ஆகிய நாம் இப்படியான அராஜகங்களை வன்மையாக கண்டிப்பதுடன் பல்கலைக்கழக உபவேந்தரும் உயர்கல்வி அமைச்சரும் இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். அதே வேளையில் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தமது நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொண்டு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றோம்.

என கட்சியின் செயலாளா் நாயகம் எஸ்.விஜயகாந் ஊடக அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Related Posts