Ad Widget

மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதித் தள்ளி விட்டு தப்பிய இளைஞர்! விரட்டிப் பிடித்தனர் ஆசிரியர்கள்!!

பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவனை மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் மோதித் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதனைக் கண்ட அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் குறித்த இளைஞரை துரத்திச் சென்று பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாயக்கிழமை மதியம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றது.

இது குறித்து மேலும் அறிய வருவதாவது:

உரும்பிராய் இந்துக் கல்லூரியில் தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவனான வயாவிளானைச் சேர்ந்த ஹரிஹரரூபன் (வயது 8) என்ற மாணவன் பாடசாலை முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்காக வீதியைக் கடந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் குறித்த மாணவனை மோதித் தள்ளினார். அத்துடன் இளைஞரும் மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறி வீழ்ந்தார். ஆனாலும் அவர் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

இதனைக் கண்ட பாடசாலை ஆசிரியர்கள் குறித்த இளைஞரை தமது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று அவரைப் பிடித்துக் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த மாணவன் உடனடியாகக் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேசமயம் மோட்டார் சைக்கிளில் வந்து விபத்து ஏற்பட்ட சமயத்தில் இளைஞரும் காயமடைந்திருந்தார். இதனால் அவரையும் பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Related Posts