தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சிறுபான்மையினர் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் அவர் சிதைத்து விட்டார்.
மேலும் மைத்திரியின் திடீர் அரசியல் நகர்வுகளை நாம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை .
நாட்டில் இதற்கு முன்னர் யுத்தம் மற்றும் வெவ்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்திருந்தன. இருப்பினும் ஜனநாயகத்துக்கு விரோதமாக எந்ததொரு அரசியல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
ஆனால் தற்போது மக்களின் ஆதரவினால் ஆட்சியமைத்தவரிடமிருந்து அதிகாரங்களை முரணான விதமாக பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிகளில் ஏனைய கட்சி உறுப்பினர்களை மாற்றும் செயற்பாடுகளில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும் நாம் இன்னும் மஹிந்தவை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்தவகையில் பெரும்பாலானோர் மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு கோரினர். அதிலும் புலம்பெயர் தமிழர்கள் கூட என்னை வலியுறுத்தியமை கவலை அளிக்கிறது.
இதேவேளை, சஜித் பிரேமதாஸ, மத்துமபண்டா, கருஜயசூரிய ஆகியோரை பிரதமர் பதவியேற்கும்படி ஜனாதிபதி கோரியதாகவும் அவர்கள் முடியாதென கூறியதால் மஹிந்தவை நியமித்ததாக கூறுகின்றார். அவ்வாறாயின் மஹிந்த அமரவீரவை நியமித்திருக்கலாமே ஏன் நியமிக்கவில்லை.
எது எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு, மலையக மக்களை ஏமாற்றிவிட்டார்” என மனோகணேசன் கவலை தெரிவித்துள்ளார்.