நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் ஏனைய இடங்களில்100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தென்கிழக்கு கடற்பரப்புகளில் காணப்படும் கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக,மாத்தறையிலிருந்து மட்டக்களப்புமற்றும் திருகோணமலைஊடாக காங்கேசந்துறை வரையானகடற்பரப்புகளில் கடும் மழைஃ இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல் மற்றும்காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோமீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும்கிழக்காக காணப்படும் ஆழம் கூடிய மற்றும்ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.