Ad Widget

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி 9 நாள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந்தேதி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தொண்டையில் துளையிட்டு சுவாச குழாய் (டிரக்கியோஸ்டோமி) பொருத்தப்பட்டது.

கடந்த 9 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தனது அறையில் உள்ள டெலிவி‌ஷனில் நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினார். பத்திரிகை படித்துள்ளார். அவர் டிவி பார்ப்பதுபோன்ற புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

தொடர் சிகிச்சைக்குப்பின்னர் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதால் நேற்று மாலை வீடு திரும்பலாம் என தகவல் வெளியானது. இதையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் தேவையான மருத்துவ சாதனங்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உரிய நடைமுறைகளுக்குப் பின்னர், அவர் 4.45 மணியளவில் அங்கிருந்து காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

கருணாநிதி ‘டிஸ்சார்ஜ்’ ஆவதையொட்டி காவேரி ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Posts