Ad Widget

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடம்

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்ப கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

mar2

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் கல்லூரி மேம்பாடு தொடர்பில் நேற்றய தினம் (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கல்லூரி வளாகத்தில் சேர்.பொன் இராமநாதனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் நிறுவுவதற்கு விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

இக்கல்லூரியில் நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுண்ணாம்புக் கட்டிடங்கள் இருப்பதாகவும் அவற்றினால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளை கருத்தில் கொண்டு புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கட்டிடங்களை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மெருகூட்டுவது மற்றும் கல்லூரியின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாகவும், உடனடியாகவும், நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டும் செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன், மாணவர்களின் விடுதியை மீள்புனரமைப்பு செய்வது தொடர்பிலும் கல்லூரியிலுள்ள கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை பாதுகாக்கும் வகையில் காவலாளிகளை நியமனம் செய்வதன் அவசியம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதனிடையே கல்லூரி மாணவர்களினது உடல், உள நலன்களை விருத்திசெய்து அதனூடாக ஆரோக்கியமான மாணவ சமூகத்தை கட்டியெழுப்பி கல்வி, மற்றும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விசேடமாக ஆராயப்பட்டது.

மாணவர்களின் நலன்களையும் போசாக்கையும் கருத்தில் கொண்டு கல்லூரி வளாகத்தில் வெற்றிடமாகவுள்ள நிலப்பகுதிகளில் பயிர்செய் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், அத்துடன் நல்லின கறவைப்பசுக்களை வளர்த்து அதனூடாக மாணவர்களுக்கு பசும்பாலை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், நல்லின கறவைப்பசுக்களை பெற்றுத் தருவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததுடன். குறித்த திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் பாடசாலையின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்டமைந்த வகையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் அதேவேளை, முதற்கட்டமாக அடிக்கல் நாட்டப்பட்டு முதலாம் மாடிக்கான கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் காலக்கிரமத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரராசா, இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளை, யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பாடசாலை அபிவிருத்தி சங்கம், இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் லண்டன் அவுஸ்திரேலிய கிளைகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி –

இரவோடு இரவாக அகற்றப்பட்டது இராமநாதன் சிலை

Related Posts