Ad Widget

மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியா அனுப்ப மஹிந்த இணக்கம் – சு.சுவாமி

போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவரையும், இந்தியா அனுப்ப இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

subramanian-swamy

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை, போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபித்தது. இதனையடுத்து, அவர்களுக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி, மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உண்ணாவிரதம் இருக்க தொடங்கியுள்ளனர். ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களில் குதித்துள்ளன.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் கையளிக்கவும் கோரிக்கை விடுத்தார் என சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மேலும், இதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ, இணக்கம் தெரிவித்ததாகவும் ட்விட்டரில் தொடர்ந்து தெரிவித்துள்ள சுப்ரமணியம் சுவாமி, தான் நினைத்ததை சாதித்து விட்டதாகவும் அந்த ட்விட்டில் மேலும் கூறியுள்ளார்.

Related Posts