Ad Widget

மயிலிட்டி மக்களை சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை!

KKSமயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சிமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த் துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

இது தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற கிராம சேவையாளர்களிடம் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

வலி.வடக்கில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 384 ஏக்கர் சொந்தக் காணிகள், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குள் உள்ளடங்கும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மயிலிட்டி வடக்கு (ஜே/246) பலாலி விமானத்தளம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களை, கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் காங்சேன்துறை சிமெந்து ஆலைக்குச் சொந்தமான சிமெந்து காணியில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மயிலிட்டி வடக்கில் மீளக் குடியமர்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், வேறிடத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைக்காக 60 பேர் வரையிலேயே பதிவு செய்துள்ளனர்.

தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் சிமெந்து ஆலைக் காணியில் மீளக் குடியமர மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

Related Posts