மன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஷவினால் பெறப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி (புதன்கிழமை) மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கையளிக்கப்பட்டன.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட மருத்தெவ நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான சிறுபிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து தற்போது வரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts