Ad Widget

மன்னார் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்: பிரஜைகள் குழு

காணாமல் போன தமது உறவுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கச் சென்ற பொதுமக்களை பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தியதால் அவர்களில் பலர் சாட்சியமளிக்கவில்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மேற்படி ஆணைக்குழுவிடம் திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

mannar-missing-father

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்து கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 11ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலான நான்கு தினங்கள் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.

மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்ற இந்த சாட்சியப் பதிவுக்கு சுமார் 230 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், 155 பேர் மட்டுமே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை (11) மடு பிரதேச செயலகத்தில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் ஜானாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவை, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை அடிகளார் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, மன்னாரிலுள்ள பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர், காணாமல் போன உறவுகள் குறித்து சாட்சியமளிக்கச் சென்ற பலரிடம், ஆணைக்குழு முன் சாட்சியம் அளிப்பதில் எவ்வித நன்மையும் இல்லை எனக் கூறி சாட்சியம் அளிக்கவிருந்த மக்களை தடை செய்துள்ளனர்.

ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவில் மக்கள் நம்பிக்கை கொண்டார்களோ இல்லையோ, அரசில் கடமையாற்றும் புலனாய்வுத்துறையினர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது.

அத்துடன் விசாரணைக்கு சமூகமளிக்கவிருந்த மக்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர் என்று எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று செபமாலை அடிகளார் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், ‘இந்த ஆணைக்குழு காணாமல்போனோர் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவாகும். இதன்மூலம் மக்களுக்கு விமோசனம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

மக்களுக்கு தடைகளை யாராவது ஏற்படுத்தினால் எங்களுக்கு தகவல் தாருங்கள். நாம் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

Related Posts