Ad Widget

மன்னாரில் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் 5,000 ஹெக்டேயர் அபகரிப்பு

பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மன்னாரில் 5 ஆயிரம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக செய்யப்படுவதாகவும் அந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்; யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன், திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசினால் திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வடிவங்களில் நிலம் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. பாரம்பரிய தமிழ் கிராமமான முள்ளிக்குளம் என்ற பகுதியும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது. மரமுந்திரிகை செய்கை என்ற போர்வையில் கொண்டச்சி பகுதியும், சிங்கள குடியேற்றம் என்ற போர்வையில் மடுரோட் மற்றும் நரிக்காடு பகுதியும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு விட்டன.

இவை, தவிர பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் தள்ளாடி பெரும்படைத் தளத்தை சூழ்ந்துள்ள சுமார் 4 ஆயிரம் ஹெக்டேயர் (4838.95) நிலப்பகுதி, ‘வங்காலை பறவைகள் சரணாலயம்’ என 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இறுதிக்கால போரின் போது ஒருபுறம் மக்கள் வீடுகளை விட்டு போக்கிடமின்றி அலறி ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் சத்தம் சந்தடியின்றி பறவைகளுக்கு காப்பரண்கள் தேடி இந்த சரணாலயம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தள்ளாடிப் பெருநிலப்பரப்பையும் – மன்னார் தீவையும் இணைக்கின்ற சதுப்பு நிலம் சார்ந்து இந்த சரணாலயத்தின் இட அமைவு இருக்கின்றது. தள்ளாடி பெரும் படைத்தளத்தை மையமாகக் கொண்ட இப்பிரதேசம் பெரும்பாலும் சதுப்பு நிலங்களையும் சதுப்பு நிலக்காடுகளையும் வற்றுப்பெருக்கு பேடுகளையும் கொண்டதாக விளங்குகின்றது.

வங்காலை, திருக்கேதீஸ்வரம், பள்ளிமுனை, சவுத்பாக் ஆகிய நிலையங்களை இணைக்கின்ற ஏறத்தாழ சதுர வடிவிலான இப்பகுதி வங்காலை கிராமஅலுவலர் பிரிவின் 60 சதவீதமான நிலப்பகுதியையும் சிறுநாவற்குளம், முள்ளிப்பள்ளம் ஆகிய இடங்களின் கணிசமான பகுதியையும் விழுங்கி இருக்கின்றது.

இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளதுடன், எதிர்கால குடியிருப்பு மற்றும் கிராமிய அபிவிருத்திக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறு மீன்பிடி, கால்நடை மேய்ச்சல் நடவடிக்கைகள், நெற்பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. குறித்த சரணாலயத்தின் மையப்பகுதியிலேயே தள்ளாடி பெரும் படைத்தளம் அமைந்துள்ளது. இத்தளம் இன்று விஸ்தரிக்கப்பட்டு புதிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுவிட்டன.

திருக்கேதீஸ்வர வீதி சார்ந்தும், வங்காலை வீதி சார்ந்தும் புதிய படை முகாம்கள் இவ்வாறு நிர்மானிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தள்ளாடிச் சந்தியில் உல்லாச விடுதிகளும், தேனீர்ச்சாலைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தள்ளாடி பெரும் படைத்தளத்தில் பௌத்த தூபியும் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தள்ளாடிச் சந்தியிலுள்ள பெரும் குளம் ஒன்று இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் பகுதியினுள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் தள்ளாடி பிரதேசம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளன. தள்ளாடி முகாமை அண்மித்துள்ள வங்காலை என்ற தமிழ் கிராமம் முற்றிலும் இராணுவ முகாம்களால் சூழப்பட்டுள்ளதால் அங்கு வாழும் மக்கள் பெரும் பீதியுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதுவித கட்டுமான பணிகளும் சரணாலய எல்லைக்குள் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், இப்பகுதியில் இராணுவ முகாம்கள் மட்டும் உருவாக்கப்படுவது இப்பகுதியானது பறவைகளுக்காக அல்ல முற்றிலும் இராணுவ முகாம் விஸ்தரிப்புக்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதி சதுப்பு நில நீர்த்தாவரங்களை கொண்டுள்ள பகுதியாக காணப்படுகின்ற போதிலும், குறித்த சில பகுதிகள் மட்டுமே மாரி காலங்களில் இடம்பெயர்ந்து வரும் நீர்ப்பறவைகள் தங்குவது வழக்கம். தள்ளாடி – மன்னார் வீதியின் இரு மருங்கிலும் உள்ள வற்றுப்பெருக்கு மேடுகளிலும், தள்ளாடி முகாமை அண்டிய ஏரிப்பகுதிகளிலும் மாரி காலங்களில் மட்டும் அத்தகைய நீர்ப்பறவைகளை காணலாம்.

பெரும்பாலான பகுதிகளில் அவற்றை காண முடியாது. வரண்ட பிரதேசமான மன்னாரில் பெரும்பாலான காலப்பகுதி வரட்சியாக இருப்பதனால் அக்காலப்பகுதிகளில் இத்தகைய வெளியிடங்களை சேர்ந்த நீர்ப்பறவைகளை காண முடியாது.

கொக்குகள், கோட்டான் எனப்படும் பறவையினங்கள், ஆட்காட்டிகள் இவைகளுடன் கழுதைகள், காட்டெருமைகள் போன்றவற்றையுமே அவதானிக்கலாம். இப்பிரதேசம் பறவைகள் சரணாலயத்துக்குரிய சிறப்பம்சங்கள் சிறிய நிலப்பரப்பிலேயே காணப்படுவதனால் அக்குறித்த பகுதியை மட்டும் அதற்காக ஒதுக்கி, ஏனைய பகுதிகள் அயற் கிராமங்களின் எதிர்கால விருத்தி கருதி விடுவிக்கப்படுவது அவசியம்.

மேலும் கட்டுமான பணிகள் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனக்கருதி இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவது தவிர்க்கப்படுதல் அல்லது முகாம்களை மூடிவிடுதல் அவசியமாகும். எனவே மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்புக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய அவசர சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related Posts