Ad Widget

மனித மண்டையோட்டுடன் பெண்களின் ஆடையணிகள்

அரியாலை முள்ளியில் மனித மண்டையோடு, எலும்புகள் மற்றும் 2 பெண்களின் ஆடைகள், அவர்களது பொருள்கள் என்பன இருந்தமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

அங்குள்ள சூழமைவுகளைப் பார்க்கும் போது அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மண்டை ஓடு உள்ளிட்ட அந்தப் பொருள்கள் மணல் அகழும்போதே வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலைக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ 9 வீதியிலிருந்து செல்லும்போது வீதியில் ரயில் கடவை உள்ளது. அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன.

சிறு வடலிகளும் பற்றைகளுமாக அந்த இடம் காணப்படுகின்றது. அங்கு மனித மண்டை ஒடு உள்ளிட்ட எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன.

தவிர பெண்களின் வெளி, உள்ஆடைகள், 2 கைப்பைகள், 2 விதமான செருப்புக்கள், பெண் பிள்ளைகள் பாவிக்கும் சிறியபேஸ் என்பன காணப்படுகின்றன. அந்த பேசினுள் பென்சில், பேனா, சில்லறைப் பணம் என்பன காணப்படுகின்றன. அதனடிப்படையில் 2 பெண்கள் அந்த இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருட்டு மணல் அகழ்வது சட்டவிரோதமாக இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. நேற்றைய தினமும் அந்த இடத்தில் டிராக்டர்கள் சென்று வந்ததற்கான தடயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருட்டு மணல் அகழ்பவர்கள் மணல் அகழும்போது அந்த எலும்புக் கூடுகள் வெளிப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் அவற்றை வெளியே எடுத்துப் போட்டுவிட்டுச் சட்டவிரோத மணல் அகழ்வைத் தொடர்வதாகக் கருதமுடிகிறதென்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு அநாதரவாக எலும்புக்கூடுகள் இருப்பது பற்றித் தகவல் பரவியுள்ளது.

முன்னர் அந்த இடம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அந்த விடயம் தொடர்பாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது எலும்புக்கூடுகளைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

சூழமைவுகளைப் பார்க்கும்போது, அந்த இடம் சுடலை அல்ல என்பதனாலும், மண்டை ஓட்டில் ஓட்டை காணப்படுவதாலும் அவர்கள் கொல்லப்பட்டார்களா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன், அங்கு மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார். அது தொடர்பில் உரியவர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts