Ad Widget

மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம் -கே.வி.குகேந்திரன்

K-V-Kukantheran-epdpமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம் என ஈபிடிபி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் டக்லஸ் அவர்களின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் தனது செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இந்த மே 18.

இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.

வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின் இருப்பையும் அடியோடு புதைத்து அதாள பாதாளத்துக்குள் எம்மக்களை தள்ளிவிட்டுள்ளது. இதற்குள் அகப்பட்டு மடிந்து போன மானிட உயிர்களோ ஏராளம்.

மரணித்த உறவுகள் யாவும் எமது இனத்தின் உறவுகளே. இந்த நினைவுகூரலை வருடந்தோறும் முன்னெடுக்கும் எம்மவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தாது இந்த நாள் நினைவு கூறப்படவேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும்.

எனவே எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் எம்மக்களின் வாழ்விடச்சூழலில் மனித உரிமைகளை மதிக்கும் நிலமைகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த காலத்தின் அவலத்திலிருந்து எமது மக்கள் மீண்டௌவேண்டும்.

இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். கடந்த காலத்தின் அவலங்களிலிருந்து மீண்டெழவென எம்மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இனி வரும் காலங்களில் எம் இனத்திற்கு நிம்மதியான, அமைதியான வாழ்வை உத்தரவாதம் செய்வதாக அமைய வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெருவிருப்பாகும்.

போராட்ட வரலாற்றில் பெரும் எண்ணிக்கையான எம் உறவுகளை இழந்துவிட்ட இப்பேரவலத்தை நினைவு கூரும் உறவுகளின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கு கொள்கிறது.

Related Posts