அனர்த்தங்களின் போது ஒன்றிணைந்து செயற்படும் மக்கள் அதன் பின்னர் இனமத வேறுபாடுகளைக்கூறி முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக கூறிய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இதன் காரணமாக மத முரண்பாடுகள் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் கலாசார திணைக்களம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒளிவிழா மன்னார் மாந்தை மேற்கு நகர விளையாட்டு மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், “முரண்பாடு இல்லாது மனிதர்கள் இருக்க வேண்டும் என மதங்கள் கூறுகின்ற போதிலும் மக்கள் மதத்தை கூறி முரண்படுகின்றனர்.
வெள்ளம், சூறாவளி, நெருப்பு போன்றவற்றினால் அனர்த்தம் ஏற்படும்போது அனைத்து மதத்தவரும் ஒன்றாக இருக்கின்றனர் அனர்த்தத்திலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் மீண்டும் மத வேறுபாடுகளைக்கூறி முரண்படுகின்றனர்.
மதங்கள் மனித நேயத்தினை மேலே வைக்குமாறு வலியுறுதுத்துகின்றன. நாம் அதனை பின்பற்றவில்லை ஆன்மாவின் விடுதலைக்காக தெய்வத்தை நினைத்து தவம் செய்கின்றவர்கள் மதத்திற்காக வன்முறையில் ஈடுபடுகின்றனர்.“ என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னான்டோ, கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாந்தை மேற்கு பிரதேச செயலர் செ.கேதீஸ்வரன் கலாசார திணைக்களப்பணிப்பாளர் சிவதாஸ், சுஜீவா உட்பட குரு முதல்வர்கள் பலர் கலந்துகொண்டனர்.