Ad Widget

மண்டைதீவில் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டனர்: சிறிதரன்

மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும், செம்பாட்டுபிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் இராணுவத்தினரால் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக யுத்தகாலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120இற்கு மேற்பட்ட இளைஞர்கள் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டதாக சிறிதரன் கூறியுள்ளார். அவற்றை சீமெந்து இட்டு இராணுவத்தினர் மூடியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை தோண்டியெடுத்து, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறு பயன்படுத்தப்படாவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இரசாயன குண்டுகளின் தாக்கம் விவசாய நிலங்களில் இன்றும் காணப்படுவதாகவும், அதனால் பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

சிறிதரனின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்தார். அதாவது தமது அமைச்சின் கீழ் காணாமல் போனோர் அலுவலகம் வருகின்ற நிலையில், இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மனோ உறுதியளித்தார். இவ்விடயங்கள் தொடர்பாக எழுத்துமூலம் தமக்கு அறிவிக்குமாறும், தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ உறுதியளித்துள்ளார்.

Related Posts