Ad Widget

மட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த தேரரால் குழப்பம்

மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த மங்களராம விகாராதிபதி முயன்றதன் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

​நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல ரத்ன தேரருக்கு ஆதரவளிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமானால் நகரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படும் எனவும் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும், அதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறும் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா பொதுக்கூட்டம் நடாத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதோ தடைசெய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையினை எதிர்த்து மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட போது, பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்ததன் காரணமாக சந்தை வீதி வழியாக பயனியர் வீதி மற்றும் கொலட் வீதிகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை தேரரும் அவரின் ஆதரவாளர்களும் மேற்கொண்டதுடன் தகாத வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்டுவந்தனர்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துகளையும் இதன்போது சிலர் தெரிவித்தபோது அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன் தேரரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பெருமளவான தமிழ் – முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்தவேளையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவிடம் பொன்.செல்வராசா நீதிமன்ற ஆணையை மதித்து குறித்த பிக்குவினை கைதுசெய்யவேண்டும். வெளியில் அவர் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்போது தடுப்பு கம்பி மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்த மங்களராம விகாராதிபதியை அதில் இருந்து இறக்கியதோடு, அவரது ஆதரவாளர்களுடன் விகாரைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை, அங்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் பொலிஸாரிடம் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதேவேளை, மங்களராமய விகாராதிபதி விவகாரம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி மட்டக்களப்பு நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்களராமய விகாரைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நின்று மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்த தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

battikallow-pikku-2

Related Posts