Ad Widget

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம்!

நீண்டகாலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். அதற்கான சந்தர்ப்பம் இன்று தான் அமைந்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

vicky-vickneswaran-cm

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் சகல வித பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் முடிவடைந்த நிலையில் மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

பல்வேறு விடயங்கள் குறித்து மன்னார் ஆயருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். மன்னார் ஆயர் அவர்கள் இங்கு இடம் பெறுகின்ற சகல பிரச்சினைகளையும் முற்றாக அறிந்தவர். அவருடைய கருத்துக்களை நாங்கள் மதிக்கின்றோம். அந்த வகையில் அவரிடம் பல விடயங்களை தேடி அறிந்து கொண்டோம்.

இங்கு நடக்கின்ற பிரச்சினைகள், எவ்விதமான பிரச்சினைகளை மக்கள் எதிர் நோக்குகின்றார்கள் என்பது தொடர்பான கருத்துக்களையும், தரவுகளையும் எமக்கு தந்து உதவியுள்ளார்.

மன்னார் ஆயருடன் கலந்து பேசியதில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை தெரிந்து கொண்டுள்ளோம். வடமாகாண சபை என்ற வகையில் குறித்த பிரச்சினைகளுக்கு நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம். என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக எவ்விதமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேல்வி எழுப்பிய போது,

மக்கள் சம்மந்தமாக, காணி தொடர்பாக, மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும், இனப்பிரச்சினைகள் தொடர்பாகவும், இன ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் பேசியிருக்கின்றோம்.

ஆகவே அவற்றினுடைய தார்ப்பரியங்கள் என்ன வென்று அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எம்மால் முடியுமான அளவிற்கு செய்வோம்.

இப்பிரச்சினைகளில் அரசியல் கலந்திருப்பதை நான் அறிகின்றேன். அரசியல் காரணங்களினாலேயே மக்கள் கஸ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தெரிந்து கொண்டுள்ளோம்.

ஆனால் எங்களுக்கு மக்களினுடைய நன்மை, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம். ஆனால் எல்லாவற்றையும் கொண்டு வந்து அரசியலுக்குள் மாட்டி விட்டதனால் தான் பல பிரச்சினைகளை நாங்கள் எதிர் நோக்குகின்றோம். ஆனால் நாங்கள் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை எடுப்போம். என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts