Ad Widget

மகிந்தவிற்கு எதிராக போராடிய தம்பிராசா எச்சரிக்கப்பட்டு விடுதலை!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த தம்பிராசா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

“ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால்மூல வாக்காளர்களின் பட்டியல் கோரப்பட்டதாகவும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழு தனிச் சிங்களத்தில் வழங்கியிருந்தது. எனவே தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை” என்று தம்பிராசா குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுகலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தம்பிராசா இன்று இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

Related Posts