Ad Widget

போலி பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என தன்னை அடையாளப்படத்திக்கொண்டு, வரணி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்ற நபரை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டார்.

அத்துடன், அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை நீதிவான் பணித்தார்.

பளை பொலிஸ் நிலையத்தில் எட்டு வருடமாக தான் கடைமையாற்றுவதாகவும் ‘உங்களுடைய தம்பியினை கைது செய்து எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்துள்ளோம். அவரை விடுவிக்கவேண்டுமானால் 5 ஆயிரம் பணம் வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பெண்ணிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ‘தம்பியினை விடுவித்து விட்டோம், நீங்கள் போய் வரலாம்’ என கூறியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நபரை கெற்பேலி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை (03) பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Related Posts