Ad Widget

போலி காரணங்களை வைத்து மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதை தவிர்ப்போம்!

நாங்கள் எங்கள் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டினால் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் சிலர் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஆத்திரமூட்டுவதாக எமது கருத்துக்கள் அமைவதாகவும் கூறுகின்றார்கள் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.

தவறான செய்திகளை உள்வாங்கி அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தபடி கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எனக்கு மிகவும் அறிமுகமானவர். புத்தர் சிலைகளை வடக்கில் அமைக்க இடமளிக்கக் கூடாது என்று எப்போதாவது கூறினீர்களா என்று நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கலாம் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன், விஜயதாஸ தவறான தகவல்களை வைத்துத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர், சட்டவிரோதமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் தனியார் காணிகளில் புத்தர் சிலை அமைப்பதையே நாங்கள் கண்டித்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே போலிக் காரணங்களை வைத்து மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவதை நாங்கள் யாவரும் தவிர்த்துக் கொள்வோமாக எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts