Ad Widget

போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்ற பணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன.

அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல் ஏற்பட்டதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கழிவகற்றல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வைத்தியசாலையில் குப்பை நிறைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

அது சுகாதாரத்துக்குக் கேடாகவும் அமைந்துள்ளது. அந்தப் பிரச்சினை தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் இரு தரப்பினரையும் அழைத்துக் கலந்துரையாடிய பின்னர் அவற்றை அகற்றி யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் புதைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உணவுக் கழிவு, குப்பை உள்ளிட்ட கழிவுகளுடன் மருத்துவ விடுதிக் கழிவுகளும் ஒன்றாகவே கொட்டப்பட்டு வந்துள்ளன. அதுவும் குப்பைகள் நிறைந்து விடக் காரணமாகிவிட்டது. அவை கிருமிகளையுடையதாக இருக்கும் என்று மாநகர தரப்பினரால் கூறப்படுகிறது.

அதனால் உணவு உள்ளிட்ட சாதாரண கழிவுகளை ஒரு புறமாகவும், மருத்துவ விடுதிக் கழிவு உள்ளிட்டவற்றைத் தனியாகவும் இனிமேல் கொட்டுவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் மூலமே கழிவ கற்றலை இலகுவாக்க முடியும் என்றும் கூறப்பட்டதனால் இன்றிலிருந்து அவற்றைத் தனித்தனியான இடத்தில் கொட்டுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் செயற்பாடு இருக்கும் என்று பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts