Ad Widget

பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை

Phoneஅச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கையடக்க தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த இரு சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காசுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய போது, அது இலக்கம் மாறி பிறிதொரு நபருக்குச் அழைப்புச் சென்றுள்ளது. தவறுதலாக அழைப்பை ஏற்படுத்தி விட்டேன் மன்னியுங்கள் என்று கூறி குறித்த பொலிஸ் அதிகாரியும் தொடர்பை துண்டித்தார்.

எனினும் இலக்கம் மாறிச் சென்ற நபர் மீண்டும் மீண்டும் பொலிஸ் அதிகாரியின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகாத வார்த்தையினால் பேசியதுடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்த பொலிஸ் அதிகாரி தமது மேலதிகாரிக்கு முறைப்பாடு செய்ததினையடுத்து, மேலதிகாரி இவ்விடயத்தினை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், குறித்த தொலைபேசி நிறுவனத்திலிருந்து பெற்ற தகவல் மூலம் குறித்த தொலைபேசி இலக்கத்திற்குரிய சந்தேகநபரையும் இனங்கண்டனர்.

தொடர்ந்து குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் ‘இது தனது பெயர் பதிவில் எடுத்துள்ள சிம் அட்டை என்றாலும் இதனை தனது நண்பர் ஒருவரே பயன்படுத்துகின்றார்’ எனத் தெரிவித்தார்.

பொலிஸார் இருவரையும் நேற்று கைது செய்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பஷிர் முஹமட் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போது, நீதிபதி இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் செல்லவும், இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டார்.

Related Posts