Ad Widget

பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்தார் சசிகலா: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா, பொது செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தனர்.

பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலா வராத நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்பட அ.தி.மு.கவின் மூத்த உறுப்பினர்கள் போயஸ் தோட்டம் விரைந்தனர்.

அங்கு சசிகலாவை சந்தித்து பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானத்தை கையில் ஒப்படைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

மேலும், ஜெயலலிதாவின் உற்ற துணையாகவும், 32 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்கும்படி கோரியிருந்ததாக தெரிவித்தார்.

பின், எங்களுடைய கோரிக்கையை ஏற்று பொதுச் செயலாளர் பதவியை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விரைவில் கட்சியின் தலைமையகத்துக்கு வந்து சசிகலா கட்சிப்பணிகளை தொடங்குவார் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Related Posts