Ad Widget

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

vicky-daklasபொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்திய அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வெளியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த பொதுச் சுகாதரப் பரிசோதகர்களை அழைத்து அவர்களின் மகஜர்களைப் பெற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்கலாமே என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆலோசனை கூறினார்.

எனினும் அதனை மறுத்த இணைத்தலைவர்கள், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாமல் அவர்களை அழைக்க முடியாது எனவும், அது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தினை குழப்பும் நடவடிக்கை என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு காடர் (வேலை செய்வதற்கான அனுமதி) உருவாக்கப்பட்டு இதற்கான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தனர்.

விரைவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தனர்.

நல்லூர், உடுவில், தெல்லிப்பளை மற்றும் சங்கானை ஆகிய பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத திணைக்களத்தின் கீழ் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பில் கடந்த 60 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்று (26) மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Related Posts