Ad Widget

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கு காசுப்பிணை

judgement_court_pinaiவேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினைச் சேர்ந்த இரண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அவர்களது சாரதியாகியோரை தலா 1 இலட்சம் ரூபா காசுப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

கீரிமலை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டிறைச்சியினை பொதுஇடத்தில் வைத்து பங்கு போட்டதாகக்கூறி இரண்டு ஆடுகளின் இறைச்சியினை தெல்லிப்பளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து சனிக்கிழமை (14) பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் 1 இலட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியானவை.

இந்நிலையில் குறித்த ஆட்டு இறைச்சிகளினை மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன் சனிக்கிழமை (14) முன்னிலைப்படுத்தியபோது, அதனை உரிமையாளர்களிடம் கையளிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

இருந்தும், பிற்பகல் வேளை ஆகியதினால் இனிமேல் ஆடுகளைப் பங்குபோட முடியாது’ எனக்கூறிய உரிமையாளர்கள் ஆட்டு இறைச்சிகளை ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில் குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எதிராக ஆட்டிறைச்சி உரிமையாளர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றத்தில் தெல்லிப்பளைப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கினை விசாரரித்த நீதவான், குறித்த இரு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களையும் அவர்களது வாகனச் சாரதியினையும் காசுப்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

பழுதடைந்த குறித்த ஆட்டிறைச்சிகளைள் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை அமைந்துள்ள வாளாகத்தின் வாசலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (15) தீ மூட்டி எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts