Ad Widget

பேராதனை பல்கலை தாக்குதலின் எதிரொலி :கனிஷ்ட மாணவர்கள் வீடு திரும்பினர்

பேராதனை பல்கலைகழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலை அடுத்து பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர சந்திப்பில் தமிழ், முஸ்லீம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருந்த நிலையில், அச்சம் காரணமாக தமிழ் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பல்கலைகழக நிகழ்வொன்றுக்காக குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 20 பேர் சிரேஷ்ட மாணவ குழுவினரால் கனிஷ்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தலைக்கவசம், தடிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

ஏனைய மாணவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்த தாக்குதல் குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனனர்.

கனிஷ்ட தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்ற போதிலும் அது குறித்த தகவல்கள் பெரிதாக வெளியில் வெளிவருவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் திரும்பும் வரை முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பல்கலைகழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

நேற்று புதன்கிழமை பல்கலைகழகத்தில் நடைபெற்ற இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்கான சந்திப்பில் பீடாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே பீடத்தின் சிரேஷ்ட தமிழ் முஸ்லீம் மாணவர்களே வலுக்கட்டாயமாக முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லீம் மாணவர்களை வீடு செல்ல வைத்துள்ளதாக சிரேஷ்ட சிங்கள மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts