Ad Widget

பேரவையில் இணைவது குறித்து விரைவில் விக்னேஸ்வரனுடன் பேசவுள்ளாராம் கருணா!

தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தி அதில் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த மாதம் உருவாக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குரிய தலைமைததுவத்தை வழங்கத் தவறிவிட்டது. தற்போது அக்கட்சி உறுதியற்ற நிலையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அக்கட்சிக்குள் ஒருமித்த கருத்தை காணமுடியாதுள்ளது. மேலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டில் ஒரு கருத்தையும் வெளிநாடுகளில் மற்றுமொரு கருத்தையும் வெளிக்காட்டியது.

அத்துடன் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முறையாகக் கையாளத் தவறியமையினாலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக திகழும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் விமர்சிப்பது போல இப்பேரவையினால் தமிழ் மக்களுக்கு பாதகத்தன்மை ஏதும் இல்லை. மாறாக மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான உபாயமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. குறித்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்களில் ஏராளமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் இனிவரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுமாத்திரமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

Related Posts