Ad Widget

பெரும்பான்மையினரை பிரதிநிதிப்படுத்தும் ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டுமாம்!

election-meeting-candidateவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன் பேச்சு நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன.

அதேசமயம், விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை என்றும் பெரும்பான்மை சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவை அவசியமானது என்றும் ஜே.வி.பி. கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலேயே அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்;

இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்ததாவது:

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அல்லது வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று நினைக்கின்றோம்.

விக்னேஸ்வரன் மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படலாம். ஆனால் தெரிவு செய்யப்படுபவர் பெரும் பான்மை இனச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்து வெற்றி பெறமுடியாது. எனவே காலத்தின் தேவைக்கேற்ப நாம் தீர்மானங்களை எடுப்போம் என்றார்.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கூறியிருப்பதாவது:

ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
நாட்டின் ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும்.

விக்னேஸ்வரனை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளதே தவிர சரியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்ததாவது:

ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. எனினும் மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது.

எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற வேண்டியதொரு தேவை உள்ளது. எனவே அதற்கு ஏற்றால் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும்.

எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்த மட்டில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுபவர் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தாதவராகவே இருக்க வேண்டும் என்றார்.

Related Posts