ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டெடுக்க சென்றிருந்தனர்.
இதன்போது சடலத்தைப் பார்வையிட்ட நிதிய துரைலாகே லக்ஷ்மன் குமார ராஜபக்ஷ (வயது 37) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகஸ்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து சக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் அவரை மீட்டு அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.