Ad Widget

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அதற்கமைய யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப்படசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் பாடசாலைகளில் உள்ள பிரச்சினை மற்றும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மாணவர்கள் மேற்படி கோரிக்கையினை அவரிடம் முன்வைத்தனர். மேலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவே இவற்றை விற்பனை செய்பவர்கள் , பயன்படுத்துபவர்களை இனம் கண்டு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் வித்தியாவின் கொலை தொடர்பில் குற்றவாளிகளை இனம்கண்டு குறைந்த பட்சம் 15 நாள்களுக்குள் தண்டனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனைகளை சட்டத்தினூடாக வலுவுள்ளதாக மாற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பாடசாலைகளில் இருக்கின்ற அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பிலும் மாணவர்கள் தெரிவித்ததுடன் போக்குவரத்து வசதிகளை சீர் செய்து தருமாறும் அவ்வாறு சீர் செய்யப்படும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் யாழ். மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றித்தருமாறும் குறித்த பாடசாலை மாணவி ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, ஆசிரியர்களும் தற்போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அவற்றினை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இவற்றை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி பாடசாலைகளில் நிலவி வருகின்ற அடிப்படைப்பிரச்சினைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மூலம் தீர்வு காண்பதாக மாணவர் மத்தியில் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கல்வி பயின்றுவரும் 35 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும் எனது பிள்ளைகளே. வித்தியாவும் எனது பிள்ளை தான். எனது பிள்ளைக்கு நடந்த சம்பவமாகவே நான் வித்தியாவின் சம்பவத்தை நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.

சமூகப் பிரச்சினையாக மாறியுள்ள வித்தியாவின் கொலை மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறான குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்க முடியாது.

குற்றவாளிகளை விரைவில் இனம்கண்டு விசேட நீதிமன்றம் அமைத்து அதனூடாக குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு விரைவில் தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் உறுதியளித்தார்.

Related Posts