Ad Widget

பூரண நியாயத்தைப் பெற்றுத்தர பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாட்சியமளிப்பது அவசியம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஆக்கபூர்வமானதாக அமைவதற்கும் பாதிக்கப்பட்ட எம்மினத்திற்கு பூரணமான நியாயத்தைப் பெற்றுத்தருவதற்கும் இனவழிப்பு நடைபெற்றதமிழ் மண்ணிலுள்ள பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாட்சியமளிப்பது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

Kajentherakumar

சர்வதேசத்தின் துணையுடன் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டுவிடக் கூடாது எனக் குறிப்பிட்டவர் சாட்சியமளிப்பது தொடர்பாக மக்களை தௌிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை அடுத்தவார இறுதிக்குள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இங்கு கருத்து வௌியிடுகையிலேயே முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டடத்தொடரின் போது இலங்கை தொடர்பாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது நாம் அத்தீர்மானத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாக கூறியிருந்ததுடன் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்த்தரப்புக்களின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் குறிப்பிட்டிருந்தோம். இதையொத்த கருத்துக்களே சிவில் சமூகத்தின் தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்காக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இறுதியாக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் விசாரணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை விடவும் பரவலான அதிகாரத்தை தாமாகவே ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டி நிற்கின்றது. அதிலும் சில குறைபாடுகள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை பெரிதுபடுத்தாது அவ்வறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

இந்நிலையில் தமிழ்த்தேசத்தில் உள்ளவர்கள் சாட்சியமளிப்பதற்கு ஆபத்தான சூழல் காணப்படுவதால் இங்கிருப்வர்கள் இல்லாமலேயே சாட்சியங்கள் வழங்கி முழுமையான விசாரணையை மேற்கொண்டு தீர்ப்புகள் வழங்கமுடியும் என்ற கருத்துருவாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தவறானதாகும். தமிழ்த்தேசத்தில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தரப்புக்கு நீதி கிடைக்கவேண்டியது அவசியமாகும். ஆகவே அதற்கான கணிசமான பங்களிப்பை எமது மக்களே வழங்கவேண்டியவர்களாக உள்ளனர்.

ஐ.நாவின் சர்வதேச விசாரணை ஆக்கபூர்வமானதாக அமைவதற்கு மிக முக்கியமான சாட்சியங்கள் தமிழர்களின் மண்ணில் தான் இருக்கின்றது. இங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் இனவழிப்பு தொடர்பாக பூரணமான சாட்சியமளிக்கக் கூடியவர்கள் இங்குதான் வாழ்கின்றார்கள். குற்றங்கள் தொடர்பாக விபரங்கள் தெரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சாட்சியங்களை வழங்கவேணடியது. அவசியமாகும்.

பாதிப்புற்ற அனைவரும் ஒன்று திரண்டு வேலைத்திட்டத்தில் இணையும் போது அந்தப்புரட்சியை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தமுடியாது. புலம்பெயர்ந்த மக்களும் அவர்களின் கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டும். எமது கட்சியானது அடுத்தவாரத்தினுள் சாட்சியமளிப்பது தொடர்பாக பொதுமக்களை தௌிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அறிவித்து முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் சாட்சியமளிப்பதற்கும் எம்மாலான உதவிகளை வழங்கவுள்ளோம். அதுவே இறந்த உறவுகளுக்கு நாம் செய்யும் கடமையுமாகும்.

தடுப்பதற்கான அதிகாரமில்லை

சர்வதேச குற்றமிழத்தவர்குளுக்கு எதிராக சாட்சியமளிப்பதையோ செயற்படுவதையோ இலங்கையில் உள்ள சாட்டங்களே ஒருபோதும் தடுக்கவில்லை. மக்கள் முன்வந்து பொய்களை சொல்வதற்கு தயாராகவில்லை. மேலும் பொய்யான சாட்சியமளிக்கவேண்டிய அவசியமுமில்லை. கடந்த காலத்தில் காணப்பட்ட அரசாங்கங்கள் போன்று தற்போதைய அரசும் மக்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி அவர்களின் கடமையை செய்யாது தடுப்பதற்குரிய நடவடிக்கையைத் தான் மேற்கொள்கின்றார்கள். உண்மையைக் கூறுவதை தடுப்பதற்கான எந்த அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதற்காக மக்கள் அச்சமடைந்து தமது கடமைகளிலிருந்து விலகவேண்டிய அவசியமுமில்லை.

ஏற்றுக்கொள்ளமுடியாது

அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர்குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. இது சர்வதேச விசாரணையின் அழுத்தங்களை குறைப்பதற்காகவே ஆகும். அத்துடன் கடந்த காலத்தில் தென்னிலங்கை அரசுகள் இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதற்காக பல்வேறு ஆணைக்குழுக்களை நியமித்து திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். தற்போதும் அவ்வாறே ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள். குற்றமிழத்து குற்றவாளிக்கூண்டில் நிற்கவேண்டிய தரப்பு நியமிக்கும் ஆணைக்குழுக்களையோ அல்லது அவர்களின் விசாரணைகளையோ எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். தற்போதையை அரசாங்கம் மட்டுமல்ல ஆட்சிப்பீடத்திற்கு வரும் எந்வொரு பெரும்பான்மை அரசாங்கம் நியமிக்கும் உள்நாட்டு ஆணைக்குழுக்களின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவற்றில் ஒருபோதும் நியாயம் கிடைக்கமாட்டாது.

இணைந்து செயற்படத்தயார்

தமிழ் மண்ணில் இனவழிப்பு நடந்துள்ளது என்பது எமது மாற்றமில்லாத தௌிவான நிலைப்பாடு. இதனை அடிப்படையாக வைத்தே இதற்கு நீதி வேண்டி எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். ஒரு இனம் அழிக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்பின் சாட்சியங்களின் பங்களிப்பு மிக அவசியமானது. தற்போது கூட சர்வதேச விசாரணையின் மூலம் பாதிப்புக்குள்ளான எமது தரப்புக்கு நியாயமான கிடைக்கும் என்பது எமது பாரிய எதிர்பார்ப்பாகும். அதனடிப்படையில் இங்கு இனவழிப்பு நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியங்கள் அளிக்குமாறு கோருகின்றோம். அந்தவகையில் இங்கு இனவழிப்பு நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொண்டு பொதுவேலைத்திட்டத்தில் செயற்பட ஏனைய தரப்புக்கள் முன்வரும் பட்சத்தில் நாமும் ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக உள்ளோம் மாறாக இக்கருத்தை மறுதலிக்கும் தரப்புக்களுடன் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது என்றார்.

Related Posts