Ad Widget

புலிகள் மீது சர்வதேச விசாரணையா? : சங்கரி விசனம்

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகளை சர்வதேச விசாரணை முன் நிறுத்தவேண்டும் என கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை, நான் முற்று முழுதாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

anantha-sankaree

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்பிரச்சினை தீர்ப்பதென்பதில் தனித்து ஒரு தீர்வினை காணமுடியாது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காண்பதற்கு பங்களிப்பை வழங்கவேண்டியது எனது புனிதமான கடமையாகும்.

இப்பிரச்சினை, ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் சவாலையும், நட்டத்தையும் ஏற்படுத்தி உடன் தீர்வு காணவேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வேறு சில உத்தரவாதங்களை கொடுத்ததோடு இனப்பிரச்சனையை பொறுத்த வரையில் சம்மந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பரம் புரிந்துணர்வு ஆகியவற்றோடு செயற்பட்டு 13ஆவது திருத்தச் சட்டத்துக்குள் தீர்வுகாணவேண்டும் எனக் கூறுகின்றார்.

ஒரு தயக்கமும் இன்றி அவர் கூறிய விடயம் ஒன்று, தனது பங்களிப்பு 13ஆவது திருத்தத்துக்குள்ளேயே அடங்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். சம்மந்தப்பட்டவர்களுடைய ஒன்றுபட்ட செயற்பாட்டுடனேயே தீர்க்கப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு பூரணபடுத்தப்படாத தூதுக்குழுவில், நான்கு தமிழரசுக் கட்சியினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ அமைப்பை சேர்ந்தவர்கள் தலா ஒவ்வொருவருமாக மொத்தம் ஆறு பேர் பங்குபற்றியுள்ளனர். புளொட் அமைப்பின் தலைவர் அண்மையில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில், ஏறக்குறைய 40,000 வாக்குகளைப் பெற்றிருந்தும் தூதுக் குழுவில் இடம்பெறவில்லை.

அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் வழமைபோல கருத்துக் கேட்கவும் இல்லை, எப்போதுமே எம்மை அழைப்பதுமில்லை. அதற்கு முக்கிய காரணம் இனப்பிச்சினையின் அத்தியாவசியத்தை உணராததாகும். அவர்களுடைய கணிப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய நான் பொறுத்தமற்றவன் போலும்.

நான், 60 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற விடயம் பற்றியும், அரசியல் பணியை மட்டுமே செய்து கொண்டிருப்பவன் என்பது பற்றியும், 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து எனது வழக்கறிஞர் தொழிலையும், நொந்தாரிசு தொழிலையும் பூரணமாக நிறுத்தியுள்ளேன் என்பது பற்றியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழி நடத்துகின்ற கத்துக்குட்டிகளுக்கு தெரியாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனக்கு கிடைத்த ஒரு புதிய தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சிகளின் நடவடிக்கை ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இவ்விரு அமைப்புக்களும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை வெளியிடுமாறு அண்மையில் கேட்டிருந்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாங்களே என்ற கூற்று முற்று முழுதாக பொய்யாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் பற்றி குறிப்பிடுவது பொறுத்தமற்றதாகும். ஆனால் விடுதலைப் புலிகளை சர்வதேச விசாரணை முன் நிறுத்தவேண்டும் என கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை, நான் முற்று முழுதாக கண்டிக்கின்றேன். ஏனெனில் அவர்கள் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்ற ஆசனங்கள், விடுதலைப் புலிகளின் சார்பாக புலம்பெயர்ந்த மக்கள் கொடுக்கும் பெருந்தொகையான பணம் மேலும் பல உதவிகள் அடங்கும்.

கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு நன்றி கெட்டத்தனமாக செயற்படுகின்றார்கள் என்பதையே இது வெளிக்காட்டுகின்றது. மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக் கூட்டணிக்குரிய தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரு தடவைகள் அனுபவித்ததோடு, 2001ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஏற்குறைய 26 ஆண்டு காலமாக செயலற்று இருந்த தமிழரசுக் கட்சிக்கு, முறையற்றவகையில் புத்துயிரளித்துள்ளார்.

அதாவது அதன் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் மறைந்த, 1977இல் இருந்து 26 ஆண்டுகாலம் செயலற்று இருந்தது. இதற்கு ஆதாரமாக ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியை புத்துயிர் கொடுத்து புனரமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

சேனாதிராசா அவர்கள் 14.10.2003 அன்று கிளிநொச்சிக்கு ஒரு விசேட விஜயத்தை மேற்கொண்டு அரசியல் பிரதித் தலைவர்களில் ஒருவரான திருதங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே இந்த புனரமைப்பு நடைபெறுகின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே இந்தப் பணியை சேனாதிராசா ஏற்றுள்ளார் என்பது தானாகவே விளங்குகின்றது.

என்னைக் கடசித்தலைவர் பதவியில் இருந்து அகற்றுவதற்கும், விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே செயற்பட்டுள்ளார் என்பதும் தானாகவே தெரியவருகின்றது.

தட்டெழுத்து சம்மந்தமான எதுவித விபரமும் தெரியாத ஒருவரை தட்டெழுத்து ஊழியராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் அமர்த்தி, இரகசிய பொலிஸாரின் விசாரணை வரப் போகின்றது எனத் தெரிந்ததும் வன்னிக்கு தப்பியோடிய நபரைப் பற்றி நாம் என்ன நினைப்பது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட நான்கு கட்சிகளுடன் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதாகும். எவருக்கும் கூறாமல், சம்மந்தப்பட்ட கட்சிக்கும் தெரிவிக்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு இந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு தான் வடக்கில் உள்ள சகல மாவட்டங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. 2004ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே. இதில் மோசமான நிலை என்னவென்றால் நான்கு கட்சிகளின் செயலாளர்களும் 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரகடனம் செய்து, ஒரு விஞ்ஞாபனத்தை ஒப்பமிட்டு வெளியிட்டுள்ளார்கள்.

முறையே இரா. சம்பந்தன், ஜி.ஜி. பொன்னம்பலம், பிரசன்னா இந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான பொறுப்புள்ள அங்கத்தவர்களின் பொறுப்பற்ற செயல் மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதன் நாணயத்தையும் இழப்பதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்த முறையை அறிந்தால் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு முற்று முழுதாகமாறாக இருந்திருக்கும்.

இனப்பிரச்சினை சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பது இனிமேல் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையில்லை. குறிப்பாக சில செயல்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரித்திரத்தையே மாற்றியமைத்துள்ளது.

1. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், வாக்களிக்க வேண்டாம் என மும்முரமாக செயற்பட்டது.
2. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்கவைத்து, தமிழர்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்று கூறி, மற்றவரை வெற்றி பெறவைத்தது.
3. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் திரு. சிவசங்கரமேனன் பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை ஏற்று, செயற்பட்டிருந்தால் இறுதி நேரத்தில்
ஏற்பட்ட பெருமளவு அனர்த்தத்தை குறைத்திருக்கலாம். அதைவிடுத்து பேச்சுவார்த்தைக்கு செல்லமறுத்ததால், அதனுடைய விளைவை மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.

நான்கு கட்சித் தலைவர்களின் பிரகடனம், பல கொடூரமான செயல்களில் ஈடுபடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்தது. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே 18ஆம் திகதி வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், பலகுற்றச் செயல்களினால் இறந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர்களில் சிலர் லகஷ்மன் கதிர்காமர், ரவிராஜ், மகேஸ்வரன், கிங்ஸ்லி இராசநாயகம் ஆகியோர் உள்ளடங்குவர். 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்கவேண்டும்.

முக்கிய விடயங்களில் கத்துக்குட்டிகளின் வழிநடந்தால், இதுபோன்ற விளைவுகளைத்தான் தரும்.

இவ்வளவு நீண்டகாலமாக எமது இனப்பிரச்சினையில் ஈடுபட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதுவித இடைஞ்சலும் எவரும் செய்யவில்லை. இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்பதே எனது கருத்தாகும்.

இக்கருத்திற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு எதிப்புத் தெரிவிக்காது என நினைக்கின்றேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி தான் சரியான அமைப்பு என நம்புகின்றேன். ஏனெனில் தமிழ் மக்களுக்குரிய பல்வேறு பிரச்சினைகள் பற்றிய நடவடிக்கை எடுக்க ஒரு நிரந்தர அமைப்பாக தந்தை செல்வா அவர்கள்; இரு பெரும் தலைவர்களாகிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர் வாதத்துடனும், பங்களிப்புடனும் விட்டுச்சென்றுள்ளார்;.

ஒவ்வொரு தமிழனும் இது தமிழருடைய சொத்து என உரிமை கொண்டாட தகுதியுண்டு. தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியை மூட்டை கட்டிவைத்து விட்டு, இரு பெரும் தலைவர்களுடன் தனது தலைமையை பங்கிட்டவராவார். தமிழர்கள் அனைவரும் இக் கட்சியை உரிமை கொண்டாட உரித்துடையவர்கள்.

இந்தியப் பிரதமரின் ஆலோசனைக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதற்காக, சகல தமிழ் அரசியல் கட்சிகளையும், தமிழப் பேசும் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தொடர்புகொண்டு அவர்களுடைய கருத்தை அறிவதற்காக இது சம்மந்தமாக கலந்து ஆலோசனை செய்யவுள்ளேன்.

இத்தகைய தலைவர்களை சந்திப்பதன் நோக்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனோ, தமிழரசுக் கட்சியுடனோ முரண்படுவதற்காக அல்ல. எனது ஒரே நோக்கம், நாம் எவ்வளவு தூரத்துக்கு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்பதில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காகத்தான். அதில் ஒருவிடயம் என்னால் முன் வைக்கப்பட்ட, அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, இந்திய முறையிலான தீர்வையும் ஆராயலாம். அதைவிட எமக்கு கஷ்டம் தருகின்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடலாம். நான் விரைவில் கூட்ட இருக்கும் சந்திப்பில் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராயலாம்.

இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தோடு தலை நிமிர்ந்து வாழவேண்டும் என நினைப்பவன் நான். எமது கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனித்து நின்று, ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்தவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய முதலமைச்சரும் முன்னாள் நீதி அரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களிடமும், மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு அவர்களிடமும் நேரிடையாகவே விளக்கமாக தெரிவித்திருந்தேன்.

இன்று வரை தமிழர் விடுதலைக் கூட்டணியை மக்களின் சொத்தாகவே பாதுகாத்து வருகின்றேன். நீதியான தீர்ப்பை தமிழ் இனத்தின் பெரியோர்கள் தரும் பட்சத்தில் அதற்கு கட்டுப்பட்டு செயலாற்றுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts