புலிகளின் காலத்திற்கு பின்னர் பெண் வன்முறைகள் அதிகரித்துள்ளன: அனந்தி

தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னரான காலத்தில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள் வன்முறைகள் தொடர்பில் நீதித்துறையில் காணப்படும் இழுத்தடிப்புக்களால் பாதிக்கப்படுபவர்கள் சட்ட உதவியை பெற முன்வருவதில்லை எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வி அனைத்து இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் ஒன்று பெண்கள் மீதான வன்முறையும் எனவும் பாலியல் சமத்துவம் பற்றி சிறு வயதிலிருந்தே கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

வீதிகளில் செல்லும் பெண்கள் கூட தற்போது சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஒன்று உருவாகி வருவதாகவும் வயது வேறுபாடுன்றியே இந்த சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றாலும் அங்கு பணபலம் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவதாகவும் இந்த பாரபட்ச நிலை மாற்றப்படுவதன் மூலமே பெண்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு சட்ட உதவியொன்றை பெறுவதற்கு முன்வருவார்கள் என கூறினார்.

Related Posts