Ad Widget

புலிகளின் இராணுவப் பேச்சாளராக பீரிஸ் மாறியது எப்போது? – சிவாஜிலிங்கம் கேள்வி

விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் எப்போது மாறினார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

தன்னைப் போன்று கருத்துக் கூறிய வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் விசாரனைக்கு உட்படுத்தப்படவேண்டுமென இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்துதெரிவித்த சிவாஜிலிங்கம் , “சாவகச்சேரி தற்கொலை அங்கி, வெடிபொருட்கள், அரசாங்கத்தின் நாடகம் என” முன்னர் சொல்லி விட்டு இப்போது அதை சொல்லவில்லை என கூறுகிறவர்கள் நாங்கள் அல்ல. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொண்டவர்கள் நாங்கள். இப்போது எங்களை அரசாங்கம் கைதுசெய்து விசாரணை செய்யப்போகின்றதென்றால் அதற்கு அஞ்சப்போவதில்லை.அதற்கும் நாங்கள் தயார்.

அதேநேரம், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர்கள் விடுதலைப்புலிகளினால் கொழும்பு வெள்ளவத்தையில் வெடிக்க வைப்பதற்காக வைக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் பீரிஸ் சொல்கின்றார். அவ்வாறானால் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எப்போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளராக அல்லது புலனாய்வு பிரிவினராக மாறினார் என்பதனைச் சொல்ல வேண்டும்.இவ்வாறு சிவாஜிலிங்கம் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts