Ad Widget

புலம்பெயர் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கமுடியாதாம்! நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டுசென்றவர்களாம்!!

“புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதினை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். காரணம், நாட்டின் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றவர்களைத் தேர்தலில் தீர்மானம்மிக்க சக்தியாக மாற்ற முடியாது.” – இப்படித் தெரிவித்தார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

ala_dalas-alka-paruma

நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறிய விடயங்கள் வருமாறு:

“ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். முடிவெடுக்க முன்னர் நாட்டின் பாதுகாப்பு, அரசின் ஸ்திரத்தன்மை மற்றும் கடந்த கால பொருளாதார முன்னேற்றம் என்பவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றில் நல்ல நிலை காணப்படுகின்றது. ஆனால், இந்தநிலையைக் குழப்பி நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் புத்துயிரளிக்க பொது எதிரணிக் கூட்டு முயற்சிக்கின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு நாட்டு மக்கள் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பிரயோகிக்குமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டியுள்ள நிலையில் மீண்டும் புலிகள் வெவ்வேறு வடிவங்களில் அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அதில் பிரதானமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்கின்றனர் இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். காரணம், நாட்டின் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றவர்களைத் தேர்தலில் தீர்மானம்மிக்க சக்தியாக மாற்ற முடியாது.

இதனை மைத்திரிபால ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான பயங்கர நிலை தோன்றுமானால் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் தலைதூக்கும் என்பதில் சந்தேகமில்லை” – என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Related Posts