Ad Widget

புலமைப்பரிசில் பரீட்சை கையேட்டின் தமிழ்மொழி வடிவத்தில் பாரபட்சம்!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை.

year 5 4545

இது மொழி உரிமையை மீறும் செயலாகும் என்று நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை மொழிபெயர்ப்பாளர்கள் இன்மையே இந்த தவறுக்குக் காரணம் என்றும் பாடசாலைகள் சிங்கள கையேட்டை பயன்படுத்தி அவற்றை மொழிபெயர்த்துக்கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விடைகள் மற்றும் 2014 இல் எதிர்பார்க்கப்படும் மாதிரி வினாக்கள் அவற்றுக்கான விடைகள் உள்ளடங்கிய தொகுப்பொன்றினை கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதி 2014 மே மாதம் முதல் பகுதியில் வெளியிட்டிருந்தது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வெளியீட்டின் தமிழாக்கத்தில் 2005 – 2013 வரையான வினாத்தாள்களும் விடைகளும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப்பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதுகுறித்து கல்வி அமைச்சின் வெளியீட்டுப் பகுதியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, மொழிபெயர்ப்பிற்கான வசதியின்மை காரணமாக அவற்றை மொழிபெயர்க்கவில்லை. பாடசாலைகள் குறித்த சிங்கள மொழிமூல வினாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்துகொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு மொழி ரீதியான பாரபட்சத்தை எடுத்துக்காட்டும் விடயமாகும். புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் உடனடியாக வினாத்தாள்களை தமிழ் மொழிபெயர்ப்பு செய்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் கிடைக்கச்செய்வது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் – என்றுள்ளது.

Related Posts