Ad Widget

புலனாய்வாளர்கள் இடையூறு – அனந்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில், சாட்சியாளர்களை சாட்சியளிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ananthi_sashitharan

அவர் தொடர்ந்து கூறுகையில்,

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமற்போனோரை மீட்கும்படி கோரி ஆட்கொணர்வு மனுவொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு தொடர்பில் உறவினர்களை சாட்சியளிக்க விடாமல் தடுக்கும் நோக்குடனேயே, அண்மையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் ஒன்றும் இராணுவப் புலனாய்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் சாட்சியங்கள் பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளிக்க பொலிஸ் பாதுகாப்பைக் கோரவுள்ளேன்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் வந்ததையடுத்து, எங்கள் உறவுகளை படையினரிடம் நேரடியாக கையளித்தோம்.

அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் பின்னர் காணாமற்போனார்கள்.

அவ்வாறு கையளிக்கப்பட்டு பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சேர்ந்து வவுனியா நீதிமன்றில் தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணைகள் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

வழக்கு விசாரணைகள் நடைபெறும் திகதிகளில் நீதிமன்றுக்கு அண்மித்த பகுதியில் இராணுவப் புலனாய்வாளர்களின் ஏற்பாட்டில் எமக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மை அச்சுறுத்தும் வகையில் இந்தப் போராட்டங்கள் உள்ளன.

அண்மையில் கூட எமக்கு எதிராக ஒரு போராட்டம் முல்லைத்தீவு நகரில் நடைபெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேவிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த, சி.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து, தற்பொழுது படையினரின் பண்ணைகளில் வேலைபார்ப்பவர்கள் ஆவார்கள்.

மேலும் கடந்தமுறை நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மகாதேவா என்ற பெயரை உடையவர் என்பதுடன் அவர் சி.எஸ்.டியில் கப்டன் தரத்தில் உள்ளார்.

அவருடைய எந்தவொரு பிள்ளையும் காணாமற்போயிருக்கவில்லை என்பதுடன் அவருடைய பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கொண்டுசெல்லவும் இல்லை.

நிலமை இவ்வாறிருக்க, அவர் விடுதலைப் புலிகள் கொண்டுசென்ற பிள்ளைகள் எங்கே எனக்கூறி போராட்டம் நடத்துகிறார்.

நியாயமான கோரிக்கைகளுக்காக நாங்கள் அமைதியான முறையில் ஒரு போராட்டத்தை நடத்த முற்பட்டால் அதற்கு பொலிஸார் தடைவிதிக்கின்றார்கள். அல்லது நீதிமன்றுக்குச் சென்று தடையுத்தரவு பெறுகின்றார்கள்.

ஆனால் எமக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய போராட்டங்கள் மிகுந்த சுதந்திரத்துடன் நடத்தப்படுகின்றது என்றால் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக இருக்கின்றார்கள் என்பதே அர்த்தம்.

எனவே இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து எமக்கு பாதுகாப்பு தேவை. எனவே அடுத்த வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் பாதுகாப்பாக நீதிமன்றம் வந்து செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்பை நீதிமன்றத்திடம் கோரவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts