Ad Widget

புதிய அரசாங்கத்தின் பட்ஜெட்டை வரவேற்கும் வடபகுதி மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன்படி, அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன் கூறுகின்றார்.

அதேவேளை, மக்களின் அத்தியாவசிய பொருட்களான கோதுமை மா, சீனி என்பவற்றின் விலைகள் மேலும் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அரிசி விலை குறித்து வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறிய அவர், அரிசி விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால், வர்த்தகர்களுக்கு வியாபாரம் அதிகரிக்க வழியேற்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் அம்மிமிதித்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விக்னேஸ்வரன், இந்த வரவுசெலவுத் திட்டத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்ட போதிலும், விவசாயிகளின் வாழ்க்கை மேம்படத்தக்க வகையில் விவசாய உள்ளீடுகளுக்கான விலை குறைக்கப்படாமலிருப்பது வருத்தமளிக்கின்றது என்றார்.

மன்னார் அடம்பனைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஹேமலதா, ‘ஊரில் எல்லோரும் அரசாங்கத்தின் விலை குறைப்பு பற்றியே பேசுகின்றனர். இந்த நல்ல விடயம் தொடர்ந்து நிலைத்திருக்குமா’ என்று கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்டம் பூனகரியைச் சேர்ந்த அரச ஊழியரான நடராசா சுந்தரமூர்த்தி, வரலாற்றிலேயே முதற் தடவையாக அரச ஊழியர்கள் பெரும் தொகைப் பணத்தை சம்பள அதிகரிப்பாக இப்போதுதான் பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அரசு குறைத்து சம்பளத்தையும் அதிகரித்திருப்பதன் மூலம். அரச ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பள உயர்வு கிட்டியிருப்பதாகவே தம்மைப் போன்ற அரச ஊழியர்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ள வடமாகாணத்தில் கிராம மட்டத்திலான வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய சிறப்பான வேலைத் திட்டங்கள் எதுவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாதுள்ளமை முக்கிய குறைபாடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts