Ad Widget

பிள்ளைகளுக்கும் தலைக்கவசம் அணியுங்கள்

யாழ். மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் சிறு பிள்ளைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு தலைக்கவசம் அணிந்துகொண்டு, தங்களது பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணியாது செல்கின்றனர். இதை அங்கீகரிக்க முடியாது என சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சஜீவ கருணாரத்தின தெரிவித்தார்.

police-chunnakam

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பொலிஸாருக்கும் பொதுமக்கள், அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘விபத்துக்களை பொலிஸாரினால் மட்டும் குறைத்துவிட முடியாது. அதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமே குறைக்கமுடியும்.

பொலிஸாரை பொறுத்தவரையில் 24 மணிநேரமும் கடமையை மேற்கொண்டு, விபத்துக்கள் இல்லாது பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர்.

வீதி ஒழுங்கு முறைகளை பொதுமக்கள் உரிய முறையில் அறியாமை மற்றும் சாரதிகள் வீதி நடைமுறைகளை முழுமையாக அறியாமை மற்றும் கடைப்பிடிக்காமை போன்ற காரணங்களே இன்று இடம்பெறுகின்ற விபத்துக்களுக்கான காரணங்களாக அமைகின்றன.

சாரதிகளுக்கான பயிற்சி நிலையங்களை நடத்துபவர்கள் இதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக எட்டுப் போடுவதற்கும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கக் கூடிய வழி முறைகளை மட்டும் கற்றுக்கொடுக்காது, முழுமையாக வீதி ஒழுங்குகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

வாகன விபத்துக்களை உடனடியாக முழுமையாக குறைத்துக்கொள்ள முடியாது. நாளாந்தம் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதுடன், புதிது புதிதாக வாகனங்களையும் கொள்வனவு செய்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை வீதிகளில் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பலர், குறிப்பிட்ட இடங்களில் பொலிஸார் இல்லையென்றால் தலைக்கவசம் அணியாது செல்கின்றனர்.

அண்மையில் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இந்து மதகுரு ஒருவர் விபத்தில் மரணமடைந்தார். அந்த மதகுரு தலைக்கவசம் அணியாது அதை தனது மோட்டார் சைக்கிளின் முன்கூடையில் வைத்திருந்தார். தலைக்கவசம் அணிந்து வந்திருந்தால், அவரை மரணம் தழுவியிருக்காது.

பொலிஸார் தலைக்கவசத்தை அணிய வற்புறுத்துவது உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான்’ என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் தனியார் சிற்றூர்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், முச்சக்கரவண்டிகள் சங்கப் பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் வணிகர் கழகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts