Ad Widget

பிரபாகரன் வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கலாம்- ஆனந்தசங்கரி

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம்.தூரதிஸ்டவசமாக எனது செய்தி மக்களை சென்றடையாததால் மக்கள் என்னை தப்பாக நினைக்கத் தோன்றியதோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

anantha-sankaree

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சில சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு பெரும் சங்கடமான நிலைமையை உருவாக்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி முற்று முழுதாக இருட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களை எங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றோம் என்று தெரியாமல் நிலைதடுமாறி நிற்கிறது. அவர்களுடைய தாரக மந்திரமாகிய சில வார்த்தைகள் படிப்படியாக அதன் செயலையும் மதிப்பையும் இழந்து வந்துள்ளமையால் மக்கள் அவர்களை நோக்கி கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெருந்தலைவர்களாகிய திருவாளர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். தொண்டமான் , அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், எஸ்.ஆர். கனகநாயகம் போன்ற இன்னும் பல வழக்கறிஞர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆகியோரின் கடும் உழைப்பால் மட்டுமன்றி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தாலும் உருவாகிய, தமிழ் மக்களின் சகல நன்மை தீமைகளை பரிபாலிக்கின்ற ஒரே நம்பிக்கை நிறுவனமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்மையான சரித்திரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

துஸ்பிரயோகம்

திரு. அமிர்தலிங்கம் அவர்களைப்பற்றி கதைப்பதற்கு மிகவும் உரித்துடையவருமான திருமதி அமிர்தலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் ‘1972 ம் ஆண்டு தமிழ் அரசியல் கட்சிகளாகிய தமிழரசு கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஸ்தாபித்து முழு தமிழ் சமூகத்தையும், ஒன்றிணைத்து சரித்திரம் படைத்தனர்’ மேலும் ‘ எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வைத்ததன் ஒரே நோக்கம் தகுதியற்ற சிலர் அக்கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துஸ்பிரயோகம் செய்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமன்றி தமிழரசு கட்சியை மீளப்புத்துயிரூட்ட ஒருபோதும் அவர் எண்ணவில்லை’ திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் கூறுகையில் என் கணவரால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துஸ்பிரயோகம் செய்ததுடன் அக்கட்சியை மீளப்புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது கவலையை தருகிறது.

ஒரேயொரு தடவை மட்டும் உபயோகிக்கப்பட்டது

அவர்கள் மீது எனது கணவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர்கள் துரோகம் செய்துள்ளனர்’. அறிக்கையின் முடிவில் அவர் தெரிவித்திருப்பதாவது நான் திட்டவட்டமாக கூற விரும்புவது யாதெனில் இந்த முயற்சியை அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. அதற்குப்பதிலாக எமது பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை அவர்கள் அழிக்க எடுத்த முயற்சியை கண்டிக்கின்றேன்.

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில் இந்த விடயத்தில் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா எவ்வாறான அபிப்பராயம் கொண்டிருந்தார் என்பதே. அவர் 1977ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர் நீத்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு திருவாளர்கள் எஸ் தொண்டமான், ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரை தங்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக தெரிவு செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின் தமிழரசு கட்சியின் பெயர் ஒரேயொரு தடவை மட்டும் உபயோகிக்கப்பட்டது.

அதுவே தமிழரசு கட்சியினுடைய வெள்ளிவிழாவாக வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் 18-12-1974 அன்று கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் திரு. எஸ். தொண்டமான் அவர்கள் தந்தை செல்வாவுக்கு முதறிஞர் பட்டம் வழங்கி கௌரவித்தார். அந்த நிகழ்ச்சியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் தந்தை செல்வா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இந்த உண்மைகளை எவரேனும் மறுப்பார்களேயானால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயாராக உள்ளேன்.

‘ஈழத்து காந்தி’ என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்

1977ஆம் ஆண்டு சித்திரை மாதம் தந்தை செல்வா இறந்ததிலிருந்து 2003ம் ஆண்டுவரை ஏறக்குறைய 26 ஆண்டுகள் செயலிழந்திருந்த தமிழரசு கட்சியின் மீள்புனரமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் துறை துணை பணிப்பாளர் திரு.தங்கன் அவர்களின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக 2003ம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி இதற்கான சந்திப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகருடன் இடம்பெற்றது. துரதிஸ்டவசமாக விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்டவொரு கட்சியாகும். ஆனால் தந்தை செல்வா அவர்கள் அகிம்சை வழியை பின்பற்றியமையால் ‘ஈழத்து காந்தி’ என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் பல ஆண்டுகள் குறிப்பிட்ட இருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருந்தனர். இந்த ஸ்தாபனத்தை விஸ்தரிப்பதற்கு நாம் எவ்வளவு கஸ்டப்பட்டோம் என்பது இவ்விருவருக்கும் தெரியாது. நான் ஒரேயொரு தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையால் வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

விசுவாசமாக இணைந்து செயற்பட்டன

இந்தக் காலப்பகுதியில் தமிழரசு கட்சியின் ஒரு கூட்டமேதும் நடைபெற்றதாக யாராவது நிரூபிக்க முடியுமா? தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டவேளை வெற்றியீட்டியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு நோக்கினால் இரு கட்சிகளும் விசுவாசமாக இணைந்து செயற்பட்டன என்பது நிரூபணமாகிறது. உதாரணமாக தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு 13,520, 14,120, 16,428, 13,110, 9049 என வாக்குகளை பெற்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு பெற்ற வாக்குகள் முறையே 31,115, 27,550, 25,840, 29,858, 15,607 பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்புக்கு எதுவித தேவையும் இருக்கவில்லை. இந்த மீள் புனரமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துரோகமாகும். அதுவும் கூட கட்சியால் வழங்கப்பட்ட, ஏனையவர்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும், பயனையும் அனுபவித்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகும். கட்சியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து அவரது வெற்றிடமான இடத்துக்கு பதவியை குறிப்பிட்ட நபருக்கு வழங்கியதால் நான் பலரின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது.

எதுவித பயனையும் பெறவில்லை

எம்மவரில் மிக முக்கியமான ஒருவர் இத் தீர்மானத்தை மறு கூட்டத்தில் பரிசீலிப்போம் என கேட்டுக்கொண்டதற்கிணங்க அக் கூட்டம் பிற்போடப்பட்டு அடுத்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்ற இந் நபர் கட்சியின் காரியாலயத்தை கவனிப்பதற்காக தொலை பேசி இணைப்பொன்றையும், ஒரு குமாஸ்தாவை தந்துதவியதுடன் தனக்குக் பாராளுமன்றத்தால் இலவசமாக வழங்கப்பட்ட பிரதி பண்ணும் இயத்திரத்தை 35,000 ரூபாவை பெற்றுக்கொண்டுதான் கட்சிக்கு அதனை வழங்கினார் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். இவற்றை தவிர அவருக்கு கிடைத்த வாகனம் உட்பட கட்சி எதுவித பயனையும் பெறவில்லை.

அடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அப்பதவியை தமக்கே தர வேண்டும் என்று இவ்விருவரும் வற்புறுத்தி நின்றனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் படுகொலையால் ஏற்பட்ட வெற்றிடத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் திருப்தியடைந்தார். மற்றவர் அப்பதவியினை வழங்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி நின்றார்.

அனைவரும் உயிருடன் உள்ளனர்

அதற்கு அவர் கூறிய காரணங்களில் ஒன்று பென்சன் பெறுவதற்கு போதிய காலம் போதாமையே என்பதாகும். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் படுகொலையில் பின் அதன் வெற்றிடத்துக்கு ஒருவரை நியப்பிப்பதற்காக அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு கூடியது. கூடியிருந்த ஏனைய ஆறு உறுப்பினர்களும் அதிர்ச்சியடைக்கூடிய வகையில் அப்பதவியை நானாக முன்மொழிந்து அவருக்கு வழங்குமாறு அக்குழு கூட்டத்தில் தெரிவித்தேன். அங்கு கூடியிருந்த அனைவரும் நான் அப்பதவியை தனக்கு வழங்குமாறு உரிமை கோரியிருப்பேன் என எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் எனது முடிவால் அவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு என்மீது கோபமுமடைந்தனர். என்னைப் பொறுத்தவரை கட்சியின் ஒற்றுமைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆச்சரியத்தோடு என்மீது கோபம் கொண்டவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிருடன் உள்ளனர் என்பது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபரை பல்லக்கில் சுமந்து நாட்டை சுற்றி வருகின்றனர்.

இதுபோன்ற பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர என்னால் முடியும். இடம் போதாமையினால் இத்துடன் நிறுத்துகிறேன். விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களைப் பற்றி எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தேன் என்பதை ஊடகங்கள் ஒத்துழைக்குமாக இருந்தால் விரைவில் உண்மைகளை வெளியிடுவேன்.

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். தூரதிஸ்டவசமாக எனது செய்தி மக்களை சென்றடையாததால் மக்கள் என்னை தப்பாக நினைக்கத் தோன்றியதோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது.

Related Posts